தேர்தலில் போட்டியிட தயாராகிறதா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ ?

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு’ எதிர்வரும் 26ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான திருத்த சட்ட மூலம் ஆகியற்றினூடாக முஸ்லிம்களின் வாக்கு பலம் தற்போது பலமிழக்கப்பட்டு செல்லாக்காசாக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைகளாக இருந்தாலும், மாகாண சபைகளாக இருந்தாலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது மிக முக்கியமாக பேசப்படும் ஒரு நிலை இதுவரை காலமும் இருந்து வந்தது. அந்நிலை தற்போதை புதிய கலப்பு தேர்தல் முறையின் மூலம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. நமது வாக்கு பலம், பலமிலக்கச் செய்யப்பட்டதினால் நமது பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் தற்போதைய மைத்திரி – ரனில் கூட்டாட்சி ஈடுபட்டு வருகிறது. புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கமாக பார்க்கப்படும் இந்நிலையில், புதிய அரசியல் யாப்பின் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறைமையிலும் கலப்பு தேர்தல் முறைமையை புகுத்துவதின் மூலம் இலங்கை முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் சூழ்ச்சியான காரியத்தில் அரசு ஈடுபடுகிறது.

இந்நிலையில் தான் அரசாங்கத்தின் இந்த கபடத்தனத்திற்கு எதிராக, பாராளுமன்றத்திற்கு வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் கலப்புத் தேர்தல் முறையை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும், வடகிழக்கு இணைப்பு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பின் திட்டங்களை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாடு முழுவதும் விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அரசியல் ரீதியில் அடிமைச் சமுதாயமாக முஸ்லிம்களை மாற்ற நினைக்கும் அரசினது செயல்பாடுகளை கண்டிப்பதுடன், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த துரோகத்தையும், இனிவரும் காலங்களில் இப்படியான துரோகச் செயல்களை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசியல் விளிப்புணர்வை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பிரச்சாரத்தை பொருத்துக் கொள்ள முடியாத சிலரும், அரசியலில் தங்களுக்கு இருக்கும் அற்ப சொற்ப இடத்திற்கும் தற்போது ஆபத்து வந்து விடும் நிலையிருப்பதை உணரும் அரசியல் வாதிகளும், முஸ்லிம்களுக்கு தற்போது இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் பிரச்சாரத்தை பயண்படுத்தி தமது அரசியல் இருப்பை தக்கவைக்க நினைக்கும் சிலபேரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தற்போதைய ‘வாழ்வுரிமை பிரச்சாரத்தை’ வைத்து நாம் அரசியலுக்குள் நுழையவிருப்பதாக பரப்புரை செய்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரையில் அரசியல் நிலைபாட்டில் தெளிவான கொள்கையை கொண்ட ஓர் பேரியக்கமாகும்.

தவ்ஹீத் ஜமாஅத் என்பது அல்லாஹ்வை வணங்கி அவன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்ற இஸ்லாத்தின் தூய கொள்கையை அதன் தூய வடிவத்திலேயே பிரச்சாரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். முஸ்லிம்களுக்கும் மாற்று மத நண்பர்களுக்கும் இஸ்லாத்தின் செய்திகளை முறைப்படி கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த இயக்கம் ஆரப்பிக்கப்பட்டது. அந்தப் பணியைத் தான் முதன்மைப் பணியாக தற்போதும், எப்போதும் தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வருகிறது.

இதே நேரம், சமுதாயப் பணிகளையும், மக்களின் நலன் கருதி வீரியமாக செய்து வருகிறது தவ்ஹீத் ஜமாஅத். இரத்த தானம் வழங்குவதில் முதன்மை இடத்தில் இருப்பதைப் போல், வெள்ளம் போன்ற அசாதாரண நிலைகளில் கூட மிக வீரியமாக இருந்து களப்பணி ஆற்றியது தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.

அந்த அடிப்படையில் தான் தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியிலான அநியாயத்தை கண்டித்தும் தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்கிறது. தேர்தல் முறை மாற்றத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது என்று தெரிந்தும் அதற்கு எதிராக செயல்படாமல், சமுதாயத்தின் தலையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக அநியாயத்திற்கு துணை போனார்கள் நமது முஸ்லிம் அரசியல் வாதிகள்.

அரசியல் களத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் முஸ்லிம் உரிமைகளை விட்டுக் கொடுத்து சுயநலமாக தங்கள் இலாபங்களை மாத்திரம் கவனத்தில் கொள்வதினால் தான் உரிமை மீட்க்கும் சமுதாய பணியையும் தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்துள்ளது.

இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையை காக்கவும் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதே தவிர, அரசியலில் கால் பதிக்கவோ, உள்ளுராட்சி, மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடவோ, பாராளுமன்றத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளவோ இந்தப் பணியை கையில் எடுக்க வில்லை.

தேர்தல் அரசியலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடாது, போட்டியிடக் கூடாது. என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதியிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும். இதுவரையில் எந்தத் தேர்தலிலும் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிட்டதும் இல்லை. தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவித்ததும் இல்லை. இனிமேலும் அரசியல் விவகாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு இதுவாகத் தான் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.

தங்கள் அரசியல் வாழ்வுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரம் இடையூராக இருப்பதாக உணரும் அரசியல் வாதிகள் இனிமேலாவது சமுதாயத்தின் உரிமை விவகாரத்தில் விளையாட நினைக்கக் கூடாது. என்பதுடன், புதிய அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்பாகும்.

எதிர்வரும், தேர்தல்களிலோ அல்லது அதன் பின்னரான மாகாண சபை தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என எதிலும் தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாகவோ, மறைமுகமாகவே எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை, தெரிவிக்கப் போவதுமில்லையென்பதுடன், தவ்ஹீத் ஜமாஅத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் யாரும் எதிர்வரும் தேர்தல்களில் கூட எந்தக் கட்சி சார்பாகவோ, சுயேற்சையாகவோ கூட போட்டியிட வில்லை என்பதை இவ்விடத்தில் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்,

A.G ஹிஷாம் MISc

செயலாளர்,

தவ்ஹீத் ஜமாஅத் – (SLTJ),

கொழும்பு.

Comments are closed.