கவனமின்மை – பகுதி 2

347

பகுதி ஒன்று படிக்க
http://www.sltj.lk/?p=558

உமர் (ரலி)  அவர்கள் ஏன் இவ்வாறு கூறினார்கள்?

நமது தலைப்புக்கு பொருத்தமான ஓர் செய்தி பாருங்கள்!

உமர் (ரலி)  அவர்களின் ஆட்சிக்காலத்தில் அபூ மூஸா (ரலி)  அவர்கள் ஒரு தேவைக்காக உமர் (ரலி) அவர்களை சந்திக்க வந்தார்கள்.

அப்போது….

உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர்(ரலி) (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூ மூஸா(ரலி) வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர்(ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூ மூஸா(ரலி) திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர்(ரலி), ‘அபூ மூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!’ என்றார்கள். ‘அவர் திரும்பிச் சென்றார்!’ என்று கூறப்பட்டது. உடனே உமர்(ரலி) அபூ மூஸா(ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (‘ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?’ என்று உமர்(ரலி) கேட்டபோது) அபூ மூஸா(ரலி), ‘இவ்வாறே நாங்கள் கட்டளையிட்டிருந்தோம்!’ எனக் கூறினார்கள். உமர்(ரலி) ‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!’ எனக் கேட்டார்கள். உடனே, அபூ மூஸா(ரலி) அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நம்மில் இளையவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சி சொல்ல மாட்டார்கள்!’ என்றனர். அபூ மூஸா(ரலி) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2062.

தனக்கு இந்த செய்தி தெரியாமல் போனதே என கவலைப்படுகிறார்கள்.

” ஆஹா உமருக்கே ஹதீஸ் தெரியாமல் இருக்கும் போது எனக்கு தெரியாமல் இருந்தால் என்ன ? ” என சிந்திக்கிறீர்களா? அப்படி சிந்திக்க வேண்டாம்! உமர்(ரலி)  அவர்களுக்கு ஒன்று தான் தெரியவில்லை மற்றவைகள் தெரிந்தே வைத்திருந்தார்கள்.

தனக்கு அந்த ஒன்று தெரியாமல் போய் விட்டதே என்று தான் கவலைப்பட்டார்.

அதே போல் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் தனக்கு ஏற்பட்ட நிகழ்வை மக்களிடம் பதிய வைக்கிறார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

கோடுகள் போடப் பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ‘இதன் கோடுகள் என் கவனத்தைத் திருப்பிவிட்டன. இதை அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு மற்றோர் ஆடையைக் கொண்டு வாருங்கள்! என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 752.

பார்த்தீர்களா ஒரு சின்ன கவனக்குறைவு தன் எஜமானோடு உரையாடும் தொழுகையைப் பால்படுத்தி விடுமோ என அச்சம் கொண்டு ஆடையை திருப்பி அனுப்பி விட்டார்களே ! .

என்ன காரணம் ? மறுமையில் என் வாழ்க்கையை நாசமாக்கும் ஏதும் எனக்கும் வேண்டாம் என உறுதியாக இருந்தார்கள்.

நாமும் இவ்வாறான உலகத்தின் பக்கம் சாய்ந்து மறுமையை நாசம் செய்து விடக்கூடாது.

இந்த கவனக்குறைவு உண்மையான தீனுல் இஸ்லாத்தை அறிந்துகொள்ள விடாமல் தடுத்து விடும் நிலையும் உருவாகும்

அல்லாஹ் கூறும் போது…

وَأَنِ احْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ ۖ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.  திருக்குர்ஆன்  5:49

وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ

37. “எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்” என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை” (என்று கூறப்படும்) .   திருக்குர்ஆன்  35:37

ஓர் வேதம் ஓர் இறைவன் அவன் வழியே சுவர்க்கப்பாதை என்ற கொள்கையில் அலட்சியமாக இருந்தால் மேலே கூறிய வசனங்கள் போல நாம் மறுமையில் தோல்வி அடைந்து விடுவோம்.

எமது கொள்கையை ஒரு முறை  மீள் பரிசோதனை செய்யுங்கள்.

அதில் ஷிர்க் இருந்தால் அல்லது பித்அத் இருந்தால் நமது நிலை என்னவாகும்?

அதனால் நாம் கவனக்குறைவாக இருந்து விடாமல் உண்மையான கொள்கையில் வாழ்வோம்.

இறை உதவியை அடைய இமயமலை அளவுக்கு உழைப்போம்… அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்..