இஸ்லாத்தின் பார்வையில் ஈஸ்டர் தாக்குதல்

116

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் எனும் தொணிப்பொருளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இத்தொணிப்பொருளை ஒட்டியதாக இக்கட்டுரை வரையப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற  தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இலங்கையை மட்டுமன்றி உலக நாடுகளையும்  உற்றுப்பார்க்க வைத்திருந்தது. 

இந்த சம்பவத்தை கண்டித்து பல நாடுகளும் பல்வேறு அமைப்புகளும் தத்தமது கண்டனத்தை தெரிவித்திருந்தன. இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயலை கண்டித்து எமது வண்மையான கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக இக்கட்டுரையை வரைகிறேன்.

யாரும் எதிர்பாராத விதத்தில் இலங்கையில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்பில் சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான குடும்பங்கள் நிர்க்கதியானதுடன்  அனேகமான சிறுவர்கள் இன்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் , சிங்கள மற்றும் இஸ்லாமியர்கள்  என பல இனத்தவர்களும் வாழும் இத்திருநாட்டில் இன மத வேறுபாடுகள் இன்றி சகலரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி சகோதரர்கள் போன்று பெரும்பாலானோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தருணத்தில் குறித்த குண்டுத் தாக்குதலில் இஸ்லாமியர்கள் தொடர்பு பட்டுள்ளனர் என்று ஊடகங்களில்  வெளியான செய்தி இவர்களுக்கு மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்லாமியர்கள் ஆயுத போராட்டத்திற்கு எதிரானவர்கள் , அவர்கள் ஒற்றுமை சமாதானம் மற்றும் சமத்துவத்தை விரும்பக்கூடியவர்கள் என்று ஏராளமான மாற்றுமத சகோதரர்கள் தெளிவாக அறிந்திருந்த போதும், ஒருவேளை  இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாமோ என உள்ளத்தின் ஓரத்தில் ஒருவகை எண்ணம் உதித்திருக்கலாம். 

இலங்கையில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதன் பிறகு  இவ்வாறானதொரு ஈணச்செயலில் யாரும் ஈடுபடக்கூடாத அளவுக்கு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் 

இத்தனை மனித உயிர்களின் பெறுமதியை அறியாது செயல்பட்ட இவர்கள் மனித இனத்தின் எதிரிகள் மனித இனத்திலிருந்தே வெளியேறியவர்கள்.

 : ஒருவேளை  இந்த சம்பவத்துடன் இஸ்லாமியர்கள் தொடர்பு பட்டிருக்கலாமோ :

இவ்வாறான எண்ணம் கொண்டவர்களுக்கு ஒருவிடயத்தை பதிவு செய்கிறேன்.

 தீவிரவாதத்திற்கென எந்த மதமும் கிடையாது, எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதுமில்லை. ஆனால் எல்லா சமயத்திலும், சமூகத்திலும் சில முட்டால் தனமாக செயற்படக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

தன் மதத்தையும் விளங்காது மனித வாழ்வின் இயல்பையும் புறியாது உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் தூண்டப்படுவதன் விளைவாக இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறலாம்.

மேலும்

இவ்வாறான சிந்தனை கொண்டவர்களுக்கு இன்னுமொறுவிடயத்தையும் பதிவு செய்கிறேன்.

இவ்வாறான தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களே கிடையாது.

இவர்கள் எப்போது பலரை கொலை செய்ய வேண்டும், அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினரோ அப்போதே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுகின்றனர்

“எவனொருவன் அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்கிறானோ அவன்  எல்லா மனிதர்களையும் கொலை செய்தவன் போலாவான்”  (அல்குர்ஆன் – 5:32)

ஒருவரை இன்னொருவர் கொலை செய்து விட்டால் எமது பார்வையில் பிரிந்தது ஒரு உயிராக இருக்கும் ஆனால் அல்லாஹ்வின் பார்வையில் எல்லா உயிர்களையும் கொலை செய்ததைப் போன்று என்றால், இப்படிப்பட்ட ஒரு மோசமான செயலை  செய்தவன் ஒருபோதும் இஸ்லாமியனாக இருக்க முடியாது.

முஸ்லிம் என்றால் யார் என்பதற்கு  அழகான  இலக்கணத்தை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

“எவரொருவர் தனது சொல்லால், செயலால் பிறரை பாதிக்காமல் நடந்து கொல்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம்”

இஸ்லாம் தீவிர வாதத்திற்கு எதிரான மார்க்கம் என்பதற்கு ஏராளமான சான்றுகளைக் கூறலாம். எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும்  தொடர்பில்லை. அத்துடன் இது கடுமையான தண்டணைக்குமுரியதாகும்

இஸ்லாம் வன்முறையை, தீவிரவாதத்தை எதிர்ப்பது மட்டுமன்றி மனித நேயத்தைப் போதிக்கும் மகத்தான மார்க்கமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறது.

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் என்றெல்லாம்  அர்த்தமுண்டு. பெயரில் மாத்திரமின்றி போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் போதிக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும். மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வாகும். நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.

மக்கள் அனைவரும் இன, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.  (அல்குர்ஆன்- 49:13)

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என்பது போல் , மனித நேயத்தை போதிக்கும் மார்க்கமாகவும் திகழ்கிறது என்பதற்கு இஸ்லாமிய போதனைகள் பல சான்றுபகர்கிறது.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழுகும் பள்ளிவாச­ல் நின்று கொண்டு சிறுநீர்கழிக்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த சஹாபாக்கள் நிறுத்து நிறுத்து என்று கூறி தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து அவர் சிறுநீர் கழிக்க இடையூராக இருக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும் என்று கூறிவிட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றி சுத்தம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அந்த கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக்கூடாது. இங்கு இறைவனை நினைக்கவேண்டும். தொழுக வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும் என்று கூறி உபதேசம் செய்தார்கள்.

 நபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்துசென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில் இது முஸ்லிமுடைய  பிரேதம் கிடையாது. (உங்களை இழி சொல்லுக்கும் பலி சொல்லுக்கும் ஆளாக்கி, நீங்கள் நாசமாகவேண்டும் என்று சபித்த, தொழும்போது கழுத்திளே மலக்குடலை வீசிய எமது எதிரியின் பிரேதம்)  (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்?) என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுவும் ஒரு உயிர்தானே என்று கூறினார்கள்.

ஒரு (முஸ்லிம் அல்லாத) பெண்மனி நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட உணவை கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டுவிட்டார்கள். இதையறிந்த தோழர்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து இவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.

எனவே மனிதனுக்கு மனிதன் இரக்கம் காட்டி, விட்டுக்கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி பரஸ்பரத்தை ஏற்படுத்தி வாழச் சொல்லுகின்ற இஸ்லாம் மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகங்களிடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது.

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே அவர் (அங்கிருந்த) கிணற்றில் இறங்கி அதி­லிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு (கிணற்றி­ருந்து) அவர் வெளியே வந்தபோது நாய் ஒன்று தாகத்தால் தவித்து நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்று (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை வாயால் கவ்விக்கொண்டு மேலே ஏறிவந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.

அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை மன்னித்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே கால்நடைகளுக்கு (உதவுவதினாலும்) எங்களுக்குப் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்று கூறினார்கள்.

மனித நேயத்தை மட்டுமன்றி உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் கால்நடைகளுடனும்கூட நேயத்துடன் நடக்குமாறு வலியுறுத்திக் கூறுகின்ற இஸ்லாம் தீவிர வாதத்தைப் போதிக்குமா?

வன்முறையைத் தூண்டுமா?

இவ்வாறான போதனைகளை ஏற்று நடக்கின்ற உண்மை முஸ்லிம் ஒருபோதும் தீவிரவாதத்தில் , வன்முறை ஈடுபட மாட்டான் என்பதை புரிந்துகொள்வோம்.