சாதாரண சூழ் நிலையில் ஜமாஅத் தொழுகை குறித்த ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

176

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுற்றறிக்கை எண் 67/2020

திகதி 18.03.2020

அன்பின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு,

கொரோனா எனும் #covid19 வைரஸ் உலகின் பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தற்போது இலங்கையிலும் பரவி வரும் நிலையில் ஒரு சில நாட்களில் 51 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை சுகாதாரத்துறை, மற்றும் பாதுகாப்புத்துறை அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதில் முக்கிய விடயமாக மக்கள் ஒன்று கூடலை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பத்தில் வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதை காரண காரியத்துடன் விளக்கியும் வருகிறார்கள்.

அத்துடன் அரசு சார்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும் ஜமாஅத் தொழுகைகள் மற்றும் ஜும்மா தொழுகையை பள்ளிவாசலில் நடத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.

எனவே இது போன்ற சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு எமது ஐங்கால தொழுகைகளையும், ஜும்மா தொழுகையையும் கூட்டாக தொழாமல் தவிர்ந்து கொள்வதே பொருத்தமான முடிவாகும்.

எனவே ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சகல மர்கஸ்களிலும் ஜமாஅத் தொழுகை மற்றும் ஜும்மா தொழுகையை நிறுத்துமாறும் வீடுகளில் உங்கள் குடும்பத்துடன் ஜமாஅத்தாக தொழுது கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்த மார்க்க நிலைப்பாடு அடங்கிய முழுமையான ஆய்வு எழுத்து வடிவிலும், வீடியோ வடிவிலும் மிக விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்!

இப்படிக்கு

எஸ்.கே ஷிஹான் முஹம்மத்

செயலாளர்,

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்