கொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்

362

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கொரோனா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதற்குரிய வலிமையான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மக்கள் நலன் சார்ந்து பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

ஓர் ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் அங்கிருப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மார்க்கம் கூறியுள்ள வழிகாட்டல்களை முதலில் பார்ப்போம்.

கொள்ளை நோய் பரவிய ஊரில்…

ஒரு ஊரில் கொள்ளை நோய் பரவி விட்டது என்றால் அந்த ஊரில் உள்ள யாரும் வெளியேறக் கூடாது. இதைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5279

இறைவனின் நாட்டத்தாலேயே நோய்கள் பரவுகின்றன என்று கூறும் மார்க்கம்தான், நோய் பரவிய ஊரிலுள்ள ஒருவர் தன்னை காத்துக் கொள்வதற்காக அங்கிருந்து வெளியேறக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றது.

பாதிக்கப்பட்ட ஊருக்கும் செல்லக் கூடாது

இறைவன் நாடினால்தான் நம்மை நோய் தாக்கும் என்று ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். ஆனால் அதே சமயம், கொள்ளை நோய் பரவிய ஊருக்கு நாமாக வலியச் செல்லக் கூடாது என்றும் வலியுறுத்துவதன் மூலம் உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் விஷயத்தில் மார்க்கம் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றது என்பதை விளங்க முடியும்.

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்

நூல்: புகாரி 1433

1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் கூறிய இந்த அற்புதமான தீர்வை இன்றைய அறிவியல் உலகம் இன்று கண்டுபிடித்துச் சொல்கின்றது. கொரோனா வைரஸ் பாதித்த இடங்களை மொத்தமாக மூடிவிடும் வழிமுறையை இன்றைய நாடுகள் கடைப்பிடிக்கத் துவங்கியுள்ளன.

ஆனால் இந்த வழிமுறை தாமதமாகப் பின்பற்றப்பட்டதாலோ அல்லது முறையாகக் கடைப்பிடிக்கப்படாததாலோ தற்போது கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி விட்டது.

ஒரு நாட்டில் நோய் பரவத் துவங்கியவுடனேயே துவக்கத்திலேயே குறிப்பிட்ட அந்த நாடு அல்லது ஊரிலிருந்து மக்கள் வெளியேற விடாமல் தடுக்கப்பட்டிருந்தால் பெருமளவு நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.

நோயாளி எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று மார்க்கம் வழிகாட்டுகிறது.

இறைவனின் நாட்டப்படி அவர் மூலம் பிறருக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதால் நோய் பாதிப்பு உள்ளான ஒருவர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், அது, தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளாக ஆக்கியுள்ளான் என்று தெரிவித்தார்கள். மேலும், கொள்ளை நோய் ஏற்பட்ட எவராயினும் அவர் பொறுமையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் அல்லாஹ் தமக்கு விதித்ததைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் வீட்டிலியே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய் குறித்தும், அது தொடர்பாக நபியவர்களின் வழிகாட்டல்கள் குறித்தும் இதுவரை கண்டோம்.

கூட்டுத் தொழுகையும்
கொரோனாவின் தாக்கமும்

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலைகளையும் அது குறித்த மார்க்கத்தின் நிலைபாட்டையும் இனி காண்போம்.

சில இஸ்லாமிய நாடுகள் ஐவேளைத் தொழுகைகளையும், ஜும்ஆ தொழுகையையும் கூட்டாக நிறைவேற்ற வேண்டாம் என உத்தரவிட்டுள்ளன. இதுகுறித்து மாறுபட்ட கருத்துக்களை சிலர் பேசி வரும் நிலையில் இதுபோன்ற சோதனையான சூழ்நிலைகளில் மார்க்கம் எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

உயிர் பாதுகாப்புக்கு மார்க்கம் வழங்கும் முக்கியத்துவம்

மனிதனுக்கு ஏற்படும் எந்த ஒரு நன்மையும் தீமையும் இறைவனின் விதிப்படியே நிகழ்கிறது என்று உறுதியாக நம்ப வேண்டும் என்பது இஸ்லாம் கூறும் அடிப்படைகளில் ஒன்றாகும்.

ஆனால் அதேசமயம், ஒரு பாதிப்பு ஏற்படுமென்றால் அதற்கான தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இறைவன் நாடினால் தான் எனக்கு மரணம் வரும் என்று கூறிக் கொண்டு, தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்கக்கூடாது. அதாவது. நாமே அழிவைத் தேடிக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.

உங்கள் கைகளை நாசத்தில் போடாதீர்கள் (அல்குர்ஆன் 2 : 195)

உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரிலா அன்பாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 29)

உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புகாரி 67)

மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் போது கூட நிர்ப்பந்தமான சூழல்களில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: தாதுஸ் ஸலாஸில் யுத்தத்தின் போது குளிர் நிறைந்த இரவில் எனக்கு குளிப்புக் கடமை ஏற்பட்டுவிட்டது. குளித்தால் நான் மரணித்து விடுவேன் என்று பயந்தேன். எனவே நான் தயம்மும் செய்து விட்டு எனது தோழர்களுக்கு சுப்ஹுத் தொழுகையைத் தொழுவித்தேன். மக்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். “அம்ரே! நீ குளிப்புக் கடமையானவனாக இருக்கும் நிலையில் உனது தோழர்களுக்குத் தொழுகை நடத்தினாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். குளிப்பதிலிருந்து என்னைத் தடுத்தது எது? என்பதை நபி (ஸல்) அவர்களிடம் நான் அறிவித்தேன். “உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரிலா அன்பாளனாக இருக்கிறான்.“ (அல்குர்ஆன் 4 : 29) என்ற குர்ஆன் வசனத்தையும் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். உடனே நபி (ஸல்) சிரித்தார்கள். என்னை எதுவும் சொல்லவில்லை.

அறிவிப்பவர் : அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல் : அபூதாவூத். (283)

குளிப்புக் கடமையான நிலையில் தொழுகையை நிறைவேற்றும் முன் குளிப்பது கட்டாயம் என்றாலும் குளிப்பதால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என ஒருவர் பயந்தால் குளிக்காமல் சலுகையைப் பயன்படுத்துவது தவறில்லை என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நிர்ப்பந்த சூழல்களில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, உள்ளத்தில் உறுதியான இறைநம்பிக்கையுடன் வெறும் வாயளவில் இணைவைப்பு வார்த்தைகளைக் கூறுவதை இஸ்லாம் குற்றமாகக் கருதவில்லை.

யார் அல்லாஹ்வை நம்பிய பின்னர், இறைமறுப்பை உளப்பூர்வமாக ஏற்று, அவனை மறுக்கிறார்களோ அவர்கள் மீதே அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது; அவர்களுக்குக் கடும் வேதனையும் உண்டு. எனினும், எவரது உள்ளம் இறைநம்பிக்கையைக் கொண்டு உறுதியாக இருக்கும் நிலையில் நிர்ப்பந்திக்கப்படுகிறார்களோ அவர்களைத் தவிர!
(அல்குர்ஆன் 16 : 106)

அதேபோன்று, நிர்ப்பந்தமான நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இறைவன் தடுத்துள்ள உணவுகளை உண்பதற்கும் மார்க்கம் அனுமதித்துள்ளது.

தாமாகச் செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்குப் பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடைசெய்துள்ளான். விரும்பிச் செல்லாமலும், வரம்பு மீறாமலும் நிர்ப்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், நிகரிலா அன்பாளன்.
அல்குர்ஆன் 2 : 173

உயிர் பாதுகாப்பிற்கு இஸ்லாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

தற்போது உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் என்பது மனிதனுக்குப் பாதிப்பும், உயிருக்கு ஆபத்தும் ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மக்களின் நலனுக்காக மருத்துவ நிபுணர்கள் கூறும் வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்வது மார்க்கத்திற்கு எதிரானதல்ல.

மார்க்கத்தில் சிரமம் இல்லை
வணக்க வழிபாடுகள் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் மனிதனுடைய சக்திக்கு உட்பட்டே செயல்படுமாறு மார்க்கம் வழிகாட்டியுள்ளது. இஸ்லாம் ஒருபோதும் மனித சமுதாயத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்தவில்லை.

அல்லாஹ் கூறுகிறான்:

இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.
(அல்குர்ஆன் 22 : 78)

அல்லாஹ் உங்களுக்கு எளிதையே நாடுகிறான். அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.
(அல்குர்ஆன் 2 : 185)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்;
நூல் : புகாரி (39)

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.
(அல்குர்ஆன் 2 : 286)

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
(அல்குர்ஆன் 64 : 16)

மனிதர்களின் சக்திக்கு மீறி சிரமப்பட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

தொழுகையை நின்று தொழமுடியாவிட்டால் உட்கார்ந்தும், உட்கார்ந்து தொழமுடியாவிட்டால் படுத்துக் கொண்டும் தொழவே மார்க்கம் வழிகாட்டியுள்ளது. (பார்க்க புகாரி 1117)

உளூச் செய்வதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் தயம்மும் செய்து தொழுது கொள்ளுமாறு மார்க்கம் வழிகாட்டுகிறது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 43)

பசியுடன் இருந்தால் சாப்பிட்ட பிறகும், மலஜலம் கழிக்க வேண்டிய நிலையில் இருந்தால் அதை நிறைவேற்றிய பிறகுமே தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்றும் மார்க்கம் வழிகாட்டுகிறது. (பார்க்க முஸ்லிம் 969)

“குளிரும் மழையும் உள்ள இரவில் “ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் வசிப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் ; முஸ்லிம் (1240)

மக்களுக்குப் சிறமம் என்றால் பள்ளியில் ஜமாஅத் தொழுகையை நடத்தாமல் வீட்டில் தொழலாம் என்பது தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து கிடைக்கும் சட்டமாகும்.

மழையினால் ஏற்படும் பாதிப்பைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் எப்படி ஜமாஅத் தொழுகையை விட முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இது அறியாமையால் எழுப்பப்படும் கேள்வியாகும்.

தூங்கும் போது (எண்ணெய்) விளக்கை அணைத்து விடுங்கள். ஏனெனில் அதன் திரியை எலி இழுத்துச் சென்று வீட்டிலுள்ளவர்களை எரித்து விடலாம் (பார்க்க: புகாரி 3316) என்ற ஹதீஸைச் செயல்படுத்த வேண்டுமென்றால் வீடு எரிவதைக் கண்ணால் கண்ட பின்னர் தான் செயல்படுத்துவேன் என்று வாதிட முடியாது.

குளிர்காலத்தில் தண்ணீரில் குளித்து பாதிப்பைக் கண்ட பிறகுதான் தயம்மும் செய்ய வேண்டும் என்று யாரும் கூறமாட்டார்கள்.

ஒரு இடத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை வைத்து அங்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அரசு சொல்கிறது என்றால், குண்டு வெடித்து மக்கள் செத்ததைப் பார்த்தால் தான் நம்புவேன் என்று சொல்வது எப்படியோ அதுபோன்று தான் இந்த வாதமும் அமைந்துள்ளது.

மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவ உலகம் கூறுவதால் அதை ஏற்று, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஒருபோதும் மார்க்கத்திற்கு முரணாக அமையாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மார்க்கத்தில் அவசியமானதே!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மனித அறிவு ஏற்றுக் கொள்ளும் ஒரு அடிப்படையாகும். புயல், சுனாமி, வெள்ளப் பெருக்கு போன்றவை ஏற்படப் போவதாகத் தெரிந்தால் அதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது. கண்ணால் கண்டபிறகுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதல்ல. பாதிப்புகள் ஏற்படுவதற்குரிய காரணங்கள் உறுதியாகத் தெரிந்தாலே முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாகவே தாழ்வான பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசுகள் உத்தரவிடும். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வீடுகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு பாதுகாப்பான பகுதியை நோக்கித்தான் செல்வார்கள். யாரும் பாதிப்பை பார்த்த பிறகுதான் செல்வேன் என்று வாதிட மாட்டார்கள். சில நேரங்களில் எதிர்பார்த்த வெள்ளப் பெருக்கு ஏற்படாமலும் போகலாம். எனினும் யாரும் முன்னெச்சரிக்கை நடடிவக்கை தவறு என வாதிட மாட்டார்கள்.

பாதிப்பு ஏற்படும் என உறுதியாகத் தெரிந்தால் மனிதர்களின் நன்மைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல!

‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்’
நூல்: புகாரி 893

இந்த ஹதீஸின் அடிப்படையில், மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஓர் அரசாங்கத்தின் கடமை என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது.

நோயின் தன்மைகளையும், அதைத் தடுக்கும் முறைகளையும் பற்றி அந்தத் துறை சார்ந்த அறிஞர்கள் சொல்வதைத்தான் ஏற்க வேண்டுமே தவிர, இப்படித்தான் நான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று ஆளாளுக்கு முடிவு செய்ய முடியாது.

மார்க்க ஆய்வுகளை மட்டுமே நாம் மேற்கொள்ள முடியும். மருத்துவம் தொடர்பான ஆய்வுகளை அந்தத் துறையிலுள்ள அறிஞர்கள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் தான் மேற்கொள்ளவேண்டும்.

எனவே ஒரு நோயைத் தடுப்பதற்காக அரசும், மருத்துவ உலகமும் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வது மார்க்கத்திற்கு எதிரானதல்ல.

தெரியாத விஷயங்களை, அதுகுறித்த அறிவு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அல்குர்ஆன் கட்டளையிடுகின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 16:43. 23:7)

எனவே கொரோனா வைரஸால் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் தொழுது கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டால் மக்கள் நலன் சார்ந்த அந்தக் கோரிக்கைக்குக் கட்டுப்படுவது குற்றமல்ல!

முஸ்லிம் நாடுகளில் கூட்டுத் தொழுகைக்கும், ஜும்ஆ தொழுகைக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விமர்சிக்கும் சிலர், இந்த நாடுகள் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளில் குறைவை ஏற்படுத்திவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

தொழுகையைத் தடை செய்வதற்கும், கூட்டுத் தொழுகை வேண்டாம், வீட்டில் தொழுகையை நிறைவேற்றுங்கள் என்ற கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் இவ்வாறு பேசி வருகின்றனர்.

மழை, குளிர் போன்ற சாதாரண பாதிப்புகளுக்காகவே கூட்டுத் தொழுகைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது, உயிர்க் கொல்லி நோய் பரவும் விஷயத்தில் இந்தச் சலுகையைப் பயன்படுத்துவது அவசியமான ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதேபோல் முஸ்லிம் நாடு அல்லாத இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அதற்குக் கட்டுப்பவது மார்க்க அடிப்படையில் ஒருபோதும் குற்றமாகாது.

மக்கள் பள்ளிக்கு வர இயலாதபோது பள்ளியில் பாங்கு சொல்லும் முறை

மக்கள் தொழுகைக்காக பள்ளிக்கு வர இயலாத நிலைகளில் பாங்கு சொல்லும் போது ‘உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்’ எனும் கருத்துப்பட பின்வரும் வாசகங்களில் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டும்.

صَلُّوْا فِى رِحَالِكُمْ
ஸல்லூ ஃபீ ரிஹாலி(க்)கும்
பொருள்: உங்கள் இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள். (புகாரி 632)

أَلاَ صَلُّوْا فِى الرِّحَالِ
அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்
பொருள்: அறிந்து கொள்ளுங்கள்! இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள். (புகாரி 666)

صَلُّوْا فِي بُيُوْتِكُم
ஸல்லூ ஃபீ புயூ(த்)தி(க்)கும்
பொருள்: உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள். (புகாரி901)

أَلاَ صَلُّوْا فِىْ رِحَالِكُمْ
அலா ஸல்லூ ஃபீ ரிஹாலி(க்)கும்
பொருள்: அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள். (முஸ்லிம் 1240)

மேலுள்ள அரபி வாசகத்தை, பாங்கில் ‘ஹய்ய அலஸ்ஸலாஹ்’ என்று சொல்வதற்குப் பதிலாகக் கூறவேண்டும்

மக்காவை அடுத்துள்ள ‘ளஜ்னான்’ என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்கள். மேலும் ‘பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழைபெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர் (ரலி) கூறினார்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: புகாரி (632)

பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறும்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்றும் நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்
நூல்: புகாரி (901)

இஸ்லாம் கூறும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவோமாக!