அழைப்பு – ஆசிரியர் கருத்து

தேர்தலில் தேறுமா முஸ்லிம் சமுதாயம்?

ஆசிரியர் தலையங்கம் “அழைப்பு” ஆகஸ்ட் 2015

ஆகஸ்ட் 17 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் எம்மை எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காய் 6151 பேர் இம்முறை களத்தில் வேட்பாளர்களாக குதித்துள்ளனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையவுள்ள இத்தேர்தலில் பிரதான இரு கட்சிகளுடன் சேர்த்து பல்வேறுபட்ட சுயேட்சை குழுக்களும் களமிறங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமின்றி, இனவாதத்தீயை இலங்கைக்குள் கொழுத்திவிட்டு குளிர்காயமுனையும் பொதுபலசேனா அமைப்பினரும் ‘பொது ஜன பெரமுன (BJP)’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கி நாகப்பாம்பு சின்னத்தில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை முஸ்லிம் சமுதாயம் அவதானமாக சிந்திக்க வேண்டிய தருணமாகும்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஊழல், அதிகார துஷ்பிரயோகம், இனவாத செயற்பாடுகள் போன்ற விமர்சனங்களால் தோல்வியைத் தழுவி குட்டுப்பட்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் கதிரையை இலக்கு வைத்து தன் கடந்த கால ஆத்மார்த்த நண்பர்களுடன் இணைந்து குருநாகல் மாவட்டத்தில் வேட்பாளராய் குதித்துள்ளமை தேர்தல் களத்தின் பதற்ற நிலையை இன்னும் உஷ்ணப்படுத்தியுள்ளதை காணமுடிகிறது.

‘ஒன்றிணைந்த வட – கிழக்குக்குள் சமஷ்டி முறையிலான தீர்வே எமது நிலைப்பாடு’ எனும் கோஷத்தை முன்மொழிந்தவர்களாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டுள்ளனர்.

நானா? நீயா? எனும் கடுமையான மோதலுக்காய் ஒவ்வொரு கட்சியும் தயாராகியுள்ள நிலையில் முஸ்லிம் சமுதாயம் இத்தேர்தலை எப்படி எதிர்கொள்கிறது என்பது மிகக்கூர்மையாக சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என நம்பப்பட்ட ரவூப் ஹகீம், றிஷாத் பதியுதீன், ஹுனைஸ் பாரூக் போன்றவர்கள் தங்களுக்குள் முட்டிமோதி பதவிக் கதிரையை தக்க வைக்கும் பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளமை இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அரசியல் ரீதியான முதல் பின்னடைவு என்றே அடையாளப்படுத்த முடியும். அதிலும் குறிப்பாக, முஸ்லிம் காங்கிரசின் பூர்வீக பூமியாய் திகழும் கிழக்கு மாகாணத்தில் றிஷாதின் கட்சி காலூன்ற எடுத்திருக்கும் முயற்சி காழ்ப்புணர்வுகளையும், கழிசடைத் தனங்களையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கிடையிலான முறுகல் ஒருபுறமிருக்க, மறுபக்கம் முஸ்லிம் சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் முஸ்தீபுகள் நாசூக்காக தீட்டப்பட்டுக் கொண்டும் உள்ள ஒரு சந்தர்ப்பத்தில் தான் இத்தேர்தல் எம்மை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக அகதிகளாக்கப்பட்டு அலைக்கழியும் மக்களின் மீள்குடியேற்றத்தில் நிலவும் கண்துடைப்பு போக்குகள், வில்பத்து பிரச்சினை, ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேச போக்குகள் என்பன பிரதானமானவை. அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாய் சூடுபிடித்து இனவாதிகளின் நாவின் பேசுபொருளாக மாறியுள்ள ISIS தீவிரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்களை முடிச்சுப்போடும் நரித்தனம் என்பன முஸ்லிம்களின் எதிர்கால சகவாழ்வை பாதிக்கும் அதிபிரதான பிரச்சினைகள் எனலாம்.

முஸ்லிம் சமுதாயத்தை சூழ்ந்துள்ள கருமேக இடர்களுக்கு மத்தியில், முஸ்லிம் நாமம் வைத்துக்கொண்டு கோடாரிக்காம்பாய் செயற்படும் அஸ்வர், முஸம்மில், சத்தார் போன்ற கழிசடை அரசியல்வாதிகளின் சாக்கடை அரசியல் வியூகங்களை சமாளித்துக்கொண்டு எதிர் நோக்கவிருக்கும் பொதுத்தேர்தலை நாம் எப்படி சந்திப்பது? என்பதும், எமது வாக்குப்பலத்தை எப்படி ஆக்கப்ப+ர்வமாய் பயன்படுத்துவது? என்பதும் எம்முன்னால் உள்ள பெரும் சவாலாகும்.

கடந்த காலங்களில் 18 முஸ்லிம் அமைச்சர்களை பாராளுமன்றம் அனுப்பி நாம் சாதித்தது ஒன்றுமில்லை. சமுதாய நலன்களுக்காயும், உரிமைகளை வென்றெடுப்பதற்காயும் குரல்களை ஓங்கி ஒலித்திட கடமைப்பட்டவர்கள் தங்கள் பதவிக்கதிரைகளை தக்கவைப்பதனையே இலக்காக கொண்டு செயற்பட்டமையை கண்கூடாக காண முடிந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

முஸ்லிம் சமுதாயம் இன்னல்களையும், சவால்களையும் எதிர்கொண்ட போது வாய் மூடி மௌனியாக இருந்து இனவாதிகளுக்கு ஒத்தூதிய முஸ்லிம் அரசில்வாதிகளை இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அத்தோடு, வாக்கு என்பது ஓர் அமானிதம் மட்டுமல்ல அது ஒவ்வொருவருடைய உரிமை என்பதனையும் கருத்திற்கொண்டு, அசட்டைத்தனத்தால் வாக்களிக்காது விட்டுவிடாமல், தங்கள் வாக்குப்பலத்தை முறையாகப்பயன்படுத்தி சமுதாய நலன்காப்பதற்கும், உரியவர்களை பாராளுமன்றம் அனுப்புவதற்கும் ஆவண செய்தல் வேண்டும். இத்தடவையாவது எமது சமுதாயம் சிந்தாமல் சிதறாமல் வாக்குளை செலுத்தி இழந்தவைகளை மீளப்பெறுமா? அல்லது வழமைபோன்று நிறங்களுக்கு அடிமைப்பட்டு தன் சுயத்தை இழந்து போகுமா? 

ஊழலுக்கும் இனவாதத்திற்கும் மத்தியில் 07 வது ஜனாதிபதித் தேர்தல்

டிசம்பர் மாத “அழைப்பு” இதழின் ஆசிரியர் கருத்து.

12 (1)தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள தேர்தலாக 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 07 ஆவது ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது. மாகாண சபை தேர்தல்களை தனித்தனியாக நடத்தியதன் மூலம், தனது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திட்ட வரைபை நாடிபிடித்துப் பார்க்கும் பணியில் ஆளும் அரசு அண்மைக் காலமாய் ஈடுபட்டது. இம்மாகாண சபை தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை மக்களின் மனங்களை விட்டும் படிப்படியாக மறைய ஆரம்பித்துவிட்டது என்பதனை பளிச் சென்று எடுத்துக்காட்டலானது. இன்னும் ஒரு ஆண்டுகள் கழியுமாயின் ஆளும் அரசுக்கு எதிரான கருத்தியல் அலைகள் மக்கள் மனங்களில் பலமாக அலைமோத ஆரம்பித்துவிடும் என்பதனை ஆய்ந்தறிந்த அரசு, தூர்ந்து போகும் தன் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காய் எடுத்த அதிரடி முடிவு தான் 07 வது ஜனாதிபதித் தோர்தல்.

மஹிந்த சிந்தனையை மக்கள் மயப்படுத்தி சதாகாலமும் அதிகாரக் கதிரையில் வீற்றிருக்க வேண்டும் எனும் ‘ஆட்சிப் போதையில்’ மெய்மறந்திருந்த ஆளும் அரசு, தனது இலக்கை அடைவதற்காய் இரத்த மற்றும் குடும்ப உறவுகளுக்குள் உயர் பதவிகளை தாரை வார்த்து குடும்ப ஆட்சியொன்றிற்கான பின்புலத்தை பவ்வியமாய் போடலானது. ஆளும் அரசின் இப்போக்கானது கட்சியின் ஆணி வேராய் இருந்து களப்பணியாற்றும் மேல் மட்ட உறுப்பினர்களிடத்திலும், கட்சிக்காய் உயிரையே இழக்கத் துணிந்த அடிமட்ட தொண்டர்களிடத்திலும் பாரிய அதிருப்திகளை தோற்றுவித்து ‘இப்படியே நீடித்தால் எமது அரசியல் எதிர்காலம் எப்படியிருக்குமோ?’ எனும் கேள்விக்கணையினை பலரது மனதில் எழுப்பலானது.

ஆட்சி மோகத்தில் மூழ்கிக் கிடந்த அரசு தனது கட்சியின் அடித்தளத்தில் ஏற்பட்டு வரும் பெருவெடிப்பை குறித்து அலட்டிக்கொள்ள நேரம் ஒதுக்க வில்லை என்பதை விட ‘என்னை விட்டால் யார் இருக்க முடியும்?’ எனும் அகங்காரத்தினால் அசட்டை செய்தது என்றே கருத வேண்டும். ஆளும் அரசுக்குள் புறையோடி வரும் எதிர்ப்புணர்வை துள்ளியமாய் எடைபோட்ட எதிரணிகள் தருணம் பார்த்து காய் நகர்த்த ஆரம்பித்தார்கள். ஆளும் அரசால் தட்டிக் கழிக்கப்பட்ட முன்னால் அரசியல் தலைவர்கள் மற்றும் இன்னால் ஆரம்ப உறுப்பினர்கள் அனைவருடனும் மந்திராலோசனை நடாத்தி மஹிந்த அரசுக்கு ஆப்பு வைக்கும் இறுதி முடிவுக்கு திகதி நிர்ணயிக்கலானார்கள். அந்தத் திகதி தான் மஹிந்த அவர்களினால் அறிவிக்கப்பட்ட ஜனாபதி தேர்தலுக்கான திகதி. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புடன் பலரும் எதிர்பாராவிதத்தில் எதிரணிகளின் பொது வேற்பாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், மற்றும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டார்.

ஏலவே, அரசின் பங்காளிக் கட்சியாக சேவகம் புரிந்த ஜாதிக ஹெல உருமய கட்சியின் விலகல் ஓர் அதிர்வலையினை ஆளும் அரசுக்குள் ஏற்படுத்தியிருக்கும் சமயத்தில், கட்சியின் அதிபிரதான தூணாகத் திகழ்ந்த 47 வருட அரசியல் அனுபவம் மிகுந்த, விவசாயிகளின் தோழன் என்ற நன்மதிப்பை பெற்ற மைத்திரியுடைய கட்சித்தாவலும், அதனோடு ஒட்டி எதிரணியில் இணைந்து வரும் அமைச்சர்களின் கட்சித் தாவல்களும் மஹிந்த சிந்தனையில் மண் போடும் நிகழ்வாகவே நோக்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டு, எதிரணிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அவர்கள் மஹிந்தவை எதிர்த்து களத்தில் இறக்கி விடப்பட்டுள்ள இந்நிலையில், இலங்கையின் அரசியல் தலத்தில் பாரிய மாற்றங்கள் நிமிடத்திற்கு நிமிடம் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ஆளும் அரசிலிருந்து பல அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக பண்டாரநாயக்க வம்சத்தின் அபிமானிகள் பலர் எதிரணியில் இணைந்தவண்ணம் உள்ளனர். அதே போல் மைத்திரியின் பிரசன்னத்தால் மனமுடைந்து போன சிலர் எதிரணியிலிருந்தும் ஆளும் அரசின் பக்கம் தாவுவதற்கு அதிக இடம்பாடுகளும் உண்டு. இன்னுமொரு புறம், மஹிந்தவின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் பல கட்சிகளும் எதிரணிக்குடையின் கீழ் ஒன்று திரண்டும் வருகின்றனர். குறிப்பாக, ஜாதிக ஹெல உருமய, ஐக்கிய தேசியக் கட்சி, சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி போன்றன குறிப்பிடத்தக்கவைகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிரணியில் கைகோர்ப்பதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு. ஏனைய இடது சாரி கட்சிகளின் ஆதரவும் பெரும்பாலும் மைத்திரியை நோக்கி மையல் கொள்வதற்கும் இடம்பாடுண்டு. அத்தோடு, தெற்காசியாவில் காலூன்ற காத்திருக்கும் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் அழுத்தமும், சர்வதேச அரசியல் சதுரங்க காய் நகர்த்தல்களும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிப்பதில் அதிபிரதான வகிபாகத்தை வகிக்கப் போவது உறுதி.

அரசியல் பதற்றத்தின் உஷ்ணம் அனைவர் உடம்பையும் ஆட்கொண்டிருக்கும் இந்நிலையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய அம்சங்கள் எவை என்பது குறித்து கவனத்தை மையப்படுத்துவது காலத்தின் அவசியமாகும்.

இன்று இந்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதிகார துஷ்பிரயோகங்கள், நிர்வாக சீர்கேடுகள், குடும்ப ஆட்சியை மையப்படுத்திய சர்வாதிகாரப் போக்கு, பொருத்தமற்ற பொருளாதார நடைமுறைகள், ஊடகச் சுதந்திரமின்மை, கலாச்சார நெறிபிறழ்வுகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைகள், போதைவஸ்துப் பாவனை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்று இந்நாட்டு மக்களை பாடாய்ப் படுத்தும் பாதகங்கள் ஏராளம். ஆளும் அரசிலிருந்து வெளிநடப்புச் செய்து பொது வேற்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்களும் மேற்சொன்ன விடயங்களை துடைத்தெறியும் விதமாய் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஆட்சி நடாத்துவதாக தனது முதல் ஊடக அறிக்கையில் கருத்து வெளியிட்டார். “17 வது அரசியல் ஷரத்தை மீளக் கொண்டுவருவதோடு 18 வது ஷரத்தை நீக்குவேன். உண்மையான ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பேன். 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பேன். முறைகேடுகலற்ற தேர்தல் நடைமுறையை தோற்றுவிப்பேன், பொலிஸ் துறையில் நிலவும் வெளித்தலையீடுகளை முடக்குவேன், அரச ஊழியர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவேன். அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி, குடும்ப ஆதிக்க ஆட்சி போன்றவற்றை களையகற்றுவேன்” என்பதுவே இவரது எதிர்கால திட்டத்தின் முன்னறிவிப்பாக அமைந்திருந்தது.

மேற்சொன்ன விடயங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், இவை தான் இந்நாட்டை சூழ்ந்திருக்கும் அடிப்படை பிரச்சினைகளா? என்பதுவே விடைகாணப்பட வேண்டிய விடயம். ஆட்சி பீடம் ஏறிய ஒவ்வொரு அரசும் தனது வாக்கு வங்கிகளை நிரப்பி ஆட்சிக் கதிரையை தக்கவைப்பதற்காக அவ்வப்போது கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம் ‘இனவாதம் – மதவாதம்’ எனும் ஆயுதமே. ஆட்சி பீடம் ஏறியவுடன் பெரும்பான்மையினரை திருப்திபடுத்துவதற்காக சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பலிகடாவாக்கும் நாரத்தனத்தையே அனைத்து ஆட்சி பீடங்களும் அரங்கேற்றியுள்ளன.

1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய தனிச்சிங்கள மொழிச் சட்டம் 30 வருட கோர யுத்தத்தையே இந்நாட்டுக்குப் பரிசாகத் தந்தது. 1983 ஆம் ஆண்டு ஜயவர்தனவின் ஆட்சியில் நடந்தேறிய தமிழின ஒழிப்பு ‘கருப்பு ஜூலை’ யாக வரலாற்றில் இடம்பிடித்தது. சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் மாவனல்லையில் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் பொருளாதாரம் இனவாதத் தீயை உஷ்ணப்படுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட ‘சிங்கள உருமய’ எனும் இனவாத அமைப்பின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வுத் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இந்த இனவாதத் தீ மென்மேலும் விஸ்பரூபம் அடைந்து முழு நாட்டையுமே சூழ்ந்துகொண்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் குரல் வலையை நசுக்கி, உரிமைகளை பறித்து, பேசுவதற்கு நாதியற்ற சமூகமாக முஸ்லிம்கள் இன்று மாற்றப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிம்களின் மத உரிமை, வழிபாட்டு உரிமை, பொருளாதார உரிமை போன்றன இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அரச உத்தியோகங்களில், பல்கலைக்கழக நுழைவில், காணிப் பங்கீடுகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் ஹிஜாப், இஸ்லாமிய வங்கி முறைமைகள், ஹலால் உணவு முறை என்பன கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. முஸ்லிம்களின் கடவுற்கொள்கையும், வேதப் புத்தகமான திருக்குர்ஆனும் இனவாதிகளால் இம்சிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் தப்புப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத, வியாபாரம் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள் எனும் கருப்புக் கண்ணாடியணிந்து பார்க்கும் மனோபாவம் பெரும் பான்மை மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டு விட்டது. இந்த இனவாதம் தான் அன்றும் இன்றும் என்றும் உள்ள முதன்மைப் பிரச்சினை. இது முஸ்லிம்களுக்கு மட்டுமோ, தமிழா;களுக்கு மட்டுமோ அல்லது இன்னொரு இனத்துக்கு மட்டுமோ உரிய தனித்துவ பிரச்சினைகிடையாது. மாறாக இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரம், கலாசாரம், அரசியல், அபிவிருத்தி, சமுதாய சகவாழ்வு, தேசிய சமாதானம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சுடுகாடாக மாற்றக் கூடிய பாரிய பிரச்சினை.

இதற்குண்டான அழகிய நியாயபூர்வமான தீர்வுகளை வழங்கக்கூடிய வேற்பாளராக யார் வருவாரோ அவருக்கே முஸ்லிம்களின் வாக்குகள் வழங்கப்படல் வேண்டும். முஸ்லிம் கட்சிகள் ஆளும் அரசுகள் அள்ளிப்போடும் சலுகைகளுக்கும், பதவிகளுக்கும் சோரம் போய்விடாது முஸ்லிம்களின் இருப்புக்கான உத்தரவாதப்படுத்தலை ஒரு பேரம் பேசும் அம்சமாக பயன்படுத்தி தனது ஸ்தீரத்தன்மையை நிலைநாட்ட வேண்டும். ஆனால், ஊழலை ஒழிப்பதிலும், நிர்வாகச் சீர்கேடுகளை அழிப்பதிலும் கரிசனை காட்டும் கூட்டணிக் கட்சிகள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாதத்தை வேரடி மண்ணோடு களைதல் குறித்து கருத்துப் பதியாமை எதிர்காலத்தை குறித்த ஐயப்பாடுகளையே எழுப்புகின்றன. அதிலும் பிரதானமாக, இனவாதத்தை இந்நாட்டில் விதைப்பதில் பாரிய பங்கு வகிக்கும் ஹெல உருமய எதிரணியில் இணைந்துள்ளமையும், பொதுபலசேனா இது வரை எதிரணியை எதிர்த்து கடுமையாக விமர்சிக்காமையும், ஹெல உருமயவுக்கும் பொது பலசேனாவுக்குமிடையில் இன்னும் திரைமறைவுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமையும், மஹிந்தவை வீழ்த்துவதற்காக எந்த அமைப்பையும் உள்வாங்கும் மனோபாவத்தில் எதிரணி இருப்பதுவும் கூட்டணி பக்கம் பொதுபலசேனாவும் கைகோர்க்குமோ எனும் ஐயத்தை எழுப்பாமலில்லை.

அவ்வாறு ஒரு நிகழ்வு நடக்குமாயின் மஹிந்தவின் இடத்தில் மைத்திரி எனும் ஆட்சியாளார் மாறலாமே தவிர இனவாதத்தை கக்கும் செயற்பாடுகள் ஒருபோதும் மாறாது என்பதுவே உண்மை. இனவாதத்தை கருவறுக்கும் செயற்திட்டங்களை கருத்திற் கொண்டே முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அளிக்கப்படல் வேண்டும். சிந்திப்பார்களா முஸ்லிம்கள்?   

குட்டுப்பட்டவர்கள் சுதாகரிப்பார்களா? சுரணையற்றுப் போவார்களா?

kuttap copyஏப்ரல் மாத “அழைப்பு” இதழின் ஆசிரியர் தலையங்கம்.

இலங்கையின் ஆளும் அரசு இரண்டு இடங்களில் குட்டுப்பட்டு தலைகுனிந்து நிற்கிறது. ஒன்று ஜெனீவா பிரேரணையின் வெற்றி. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியும், சிறுபான்மையின மதங்கள், இனங்களுக்கிடையிலான தாக்குதல்களை சுட்டிக் காட்டியும், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இருக்கின்ற இடையூறுகளை குறிப்பிட்டும் இலங்கைக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றுக்கு அடிகோலும் தீர்மானம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டது. Read More

“ஜெனீவா சர்வதேச விசாரணை” நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் சவக்குழி!

genewa(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாதாந்த வெளியீடான “அழைப்பு” பத்திரிக்கையின் பெப்ரவரி மாத இதழில் பத்திரிக்கை ஆசிரியர் பர்சான் அவர்கள் எழுதிய ஆசிரியர் தலையங்கம்). Read More